அடையாளங்களை அழிக்கும் இனவாதமும் அவற்றை மீட்கும் போராட்டமும்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழர் இனவழிப்பு நினைவுத்துாபி அழிக்கப்பட்ட நிகழ்வும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்தவையும் தமிழ்ச்சமூகத்துக்கும் உலகத்துக்கும் கூறிநிற்கும் செய்திகள் பல.
நினைவிட அழிப்பென்பது காலங்காலமாக நிகழ்ந்துவரும் ஒரு வன்முறைதான். மாவீரர் துயிலுமில்லங்கள் முதற்கொண்டு தமிழரின் பல்வேறு நினைவிடங்களையும் அடையாளச் சின்னங்களையும் அழித்துவந்திருக்கின்ற நிலையில் இறுதியாக நிகழ்ந்திருப்பதே இந்நிகழ்வு. இம்முறை சிவில் நிர்வாக அதிகாரத்தைக் கொண்டே – குறிப்பாக தமிழர்தரப்பின் பிரதிநிதிகளைக் கொண்டே இந்த நினைவிட அழிப்பை நிகழ்த்தி முடித்திருக்கிறது பேரினவாதம்.
ஆனால் திட்டமிட்டபடி இரவோடிரவாக நினைவிடத்தை அழித்து, ஏனைய நினைவிடங்களையும் துடைத்தழிக்கும் திட்டம் கைகூடவில்லை. மாணவர்களதும் அரசியற்செயற்பாட்டாளரதும் தளராத, துணிவான செயலால் அன்றிரவு முழுமையாக அந்த அழித்தொழிப்பை நிறைவேற்ற முடியவில்லை. மேலும் இதுவோர் அரசியற் போராட்டமாகப் பரிணமித்தவேளையில் உலகம் முழுவதும் அதிக கவனயீர்ப்பையும் இச்செயல் பெற்றுக்கொண்டது. குறிப்பாக தமிழகத்திலும் உடனடியான எதிர்வினைகள் பரவலாகக் கிளம்பின. ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத்தொடர் நெருங்கிவரும் வேளையில் இதை ஏன் சிங்கள அரசு செய்யத்துணிந்தது என்ற ஐயமும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
எதிர்பாராத சலசலப்பையும் எதிர்ப்பையும் தொடர்ந்து தற்போதைக்கு ஓர் உறுதிமொழியோடு மாணவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. நினைவிடம் மீளக்கட்டப்படுமென்ற உறுதிமொழி குறித்து நம்பிக்கைகொள்ள முடியாதென்றபோதிலும், இந்த முடிவானது ஒருவகையில் நன்மையான விளைவுகளைத் தந்துள்ளது. ஒன்றுபட்டுப் போராடினால் விளைவைப் பெறலாமென்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்துள்ளமை மிகமுக்கிய ஓர் அடைவு. மிக முக்கிய காலகட்டத்தில் சிறிலங்கா அரசின் இன்னோர் அடக்குமுறை முகத்தை உலகத்துக்குக்காட்ட இதுவொரு வாய்ப்பாகப் போனது இன்னோர் அனுகூலம்
ஆனாலும், இதில் நாம் வென்றுவிட்டோமென்ற மகிழ்ச்சியில் நாம் களிக்க முடியாதென்பதையே வரலாறு சொல்லிச் சென்றுள்ளது. இதுவொரு கண்துடைப்பு முடிவு என்ற நிலையிலிருந்தே தமிழர்கள் இதை அணுகி விழிப்புணர்வோடு அடுத்தகட்ட நகர்வுகளைச் செய்ய வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட வடிவத்தில் தொடர் செயற்பாடுகளை விழிப்போடு நகர்த்துவதில்தான் எமது வெற்றி தங்கியுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் இப்பிரச்சனையை இன்னும் முழுவீச்சில் எமது மக்கள் பயன்படுத்தி சிறிலங்கா அரசின் தொடர் அடக்குமுறையை ஆவணப்படுத்த வேண்டும்.


No comments:
Post a Comment