பேயும் நானும் - தேசத்தின் குரல்

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 19, 2021

பேயும் நானும்


நேற்று (தமிழோடு பரிச்சயம் குறைந்த
, நீண்டகாலம் வெளிநாட்டில் வாழும்) ஈழத்து நண்பரொருவரோடு கதைத்துக்கொண்டிருந்தபோது "பேப் பம்பல்" என்று ரிடத்திற் பாவித்துவிட்டேன்.

அவர் பேயைக் கண்டது போல் முழித்ததுதான் மிச்சம்.

அவருக்கு "பேய்" என்ற சொல் வரும் முறையும் தெரியவில்லை; பம்பல் என்ற சொல்லும் தெரியவில்லை.

அவருக்கு அதை விளக்கியபின் யோசித்துப் பார்த்தேன்.

'பேய்' என்பதை நாங்கள் சில இடங்களில் வெவ்வேறு பொருளில் பாவிக்கிறோம். 'பம்பல்' பற்றிச் சொல்ல வேண்டிய தேவையில்லையென்பதால் 'பேய்' பற்றி மட்டும் சிறிது கதைக்கலாம்.

ஈழத்தில் பேச்சு வழக்கில் 'பேய்' என்ற சொல்லை வேறுவேறு பொருள்தரும் வண்ணம் நாலைந்து சந்தர்ப்பங்களில் பாவிக்கிறோம்.

1.       முதலில் 'பெரிய', 'சிறந்த' என்ற பொருள்களில்.

"பே(ய்)ப் பம்பல்" -> சிறந்த / பெரிய நகைச்சுவை

"பே(ய்)ச் சந்தோசம்" -> மிகுந்த மகிழ்ச்சி.

"பே(ய்)க் காய்" -> ஒன்றில் சிறந்தவர், நிபுணத்துவமானவர் என்பதைக் குறிக்கும். இங்கே 'காய்' என்பது நபரையே குறிக்கும். ஆனால் தனித்துப் பொருள் தராது.

ஒருவரைச் சுட்டி "ஆள் உதில பே(ய்)க்காய்" என்றால், அவர் குறிப்பிட்ட ஒன்றில் விண்ணனாக, வல்லவனாக இருப்பார். சின்னவயசில ஒருத்தன் ஆரையாவது "பேக்காய்" எண்டு சொன்னா, 'உனக்குத் தெரியுமோ? அவனொரு சீக்காய்" எண்டு எதிர்த்து நக்கலடிப்போம். (சீக்காய் - பனங்காயின் முற்றியவடிவம்)

மேற்கண்டவற்றில் 'பேய்' என்பது பெரிய, சிறந்த என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது. பேய் என்பது கதைக்கும்போது தனியே "பே" என்பது மட்டுமே ஒலிப்பதால் அடைப்புக்குறிக்குள் (ய்) கொடுத்துள்ளேன்.

பேச்சந்தோசம், பேப்பம்பல், பேக்காய்... போல.

உண்மையில் 'பேய்' என்பதற்கு வேறேதாவது பொருளிருக்கா? பிசாசு என்ற பொருள்தரும் பேயைத்தான் இதற்குப் பாவிக்கிறோமா? அல்லது சிறந்த, பெரிய, அருமையான என்ற பொருள் தரும் வேறேதாவது சொல்லிலிருந்துதான் இந்த 'பே' என்ற ஒலி வந்திருக்குமா? என்று யாராவது சொல்லுங்கள்.

*******************************

2.       இன்னொரு பொருளிலும் இந்தப் 'பேய்' வருகிறது.

"பே(ய்)ப் பட்டம் கட்டாதே"

"பே(ய்)க் காட்டாதே"

மேற்கண்டவற்றில் பேய் என்பது 'ஏமாற்றுதல், குழப்புதல் என்ற பொருளில் வருகிறது. பேக்காட்டுதல் என்றால் ஏமாற்றுதல்.

"என்னைப் பேயன் எண்டு நினைச்சியோ?"

"நானொரு பேயன் இஞ்ச குந்திக்கொண்டிருக்கிறன்." என்பதில் 'பேயன் முட்டாளாகவோ விசரனாகவோ அர்த்தப்படும்.

இதற்கு ஏதாவது கதையுண்டா தெரியவில்லை. 'புலி வருது புலி வருது' கதைபோல யாராவது பேயைக் காட்டுவதாகச் சொல்லிச்சொல்லி ஏமாற்றிய மாதிரி ஏதாவது கதைகள் மக்களிடம் இருந்து, அதிலிருந்து இந்தப் 'பேய்' வந்திருக்குமா?

"உதுவொரு பேய்வேலை"

என்றால் முட்டாள்தனமான, புத்தியற்ற, நன்மை பயக்காத வேலை என்ற பொருளில் வரும்.

"நானொரு பேவேலை பாத்திட்டன்' என்றாலும் முட்டாள்தனமான செயலொன்றைச் செய்துவிட்டேன் என்ற கருத்தே.

********************************

3.       அடுத்து பேய்க்கதை.

இதுவொன்றும் திகில் கதையன்று.

"பேக்கதை பறையாத"

'நான் இவ்வளவு சொல்லிறன், நீ பேக்கதை கதைச்சுக்கொண்டிருக்கிறாய்'

என்பன போன்ற, எதிராளியின் மீதான சினத்தைக் கொட்டும் வசனங்களில் பேய்க்கதை வருகிறது.

இங்கே 'பே(ய்)க்கதை' என்பது ஆத்திரமூட்டும், எரிச்சலைத்தரும், சினந்தரும் பேச்சு என்ற பொருளில வருகிறது.

**இரண்டு வெவ்வேறான மனநிலையில் இந்தப் பேய் வருகிறது. முதலாவதில் மகிழ்ச்சி (பேச்சந்தோசம்). மற்றதில் ஆத்திரம் (பேக்கதை)

********************************

இதைவிட ஒருவனை/ஒருத்தியை 'பே(ய்)க்கிளாத்தி' (அவளொரு பேக்கிளாத்தி) என்று திட்டும் வழக்கமுண்டு.

நான் சொன்னவற்றைவிடவும் மேலதிக 'பேய்'த்தனமான மொழியாளுகைள் இருந்தால் அறிய ஆவல்.

ஈழத்தைவிட, தமிழகத்தில் இப்படி 'பேய்'த்தனமான உரையாடலுண்டா என அறிய விருப்பம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages