இலங்கைத்தீவானது நீண்டகால போரின் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடாதநிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. போரின்றிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அது கணிசமான அளவில் முன்னேறியிருக்க வேண்டும் என்றபோதும் அப்படி நடக்கவில்லை.
தமிழ்த் தேசம் மீதான ஓர வஞ்சனையாலும் தொடர்ச்சியான தமிழர் அடக்குமுறை காரணமாகவும் தமிழ்த் தேசம் தொடர்ந்தும் பின்னடைவுக்குள் தக்கவைக்கப்பட்டிருப்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் தமிழர் மீதான அடக்குமுறை இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆனால் சிங்கள தேசமும் வளர்ச்சியின்றி பின்னோக்கிப் போய்க்கொண்டிருப்பதை புள்ளிவிபரங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. போரை வென்ற வெற்றி மமதையில் சிங்கள தேசம் திளைத்திருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்வதும், கடன்சுமை தாங்கொணா அளவுக்கு உயர்வதுமான நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. போரின் பின்னரும்கூட நாட்டைச் சீரான சிவில் நிர்வாக முறைக்குள் கொண்டுவந்து நிர்வகிக்க ஆட்சியாளர்கள் தயாரில்லை என்பதை அவர்களின் நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.
குடும்ப ஆட்சி ஒருபுறம், வலுவான எதிர்க்கட்சியில்லாத தளம்பல் நிலை மறுபுறம், யுத்தவெற்றிவாதத் திமிரில் பெரும்பான்மைச் சிங்களவர்கள் திளைத்திருப்பது இன்னொரு புறமாக நாட்டின் நிர்வாகக் கேட்டிற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இந்நிலையில், அளவுக்கு மீறிய இராணுவத் தலையீட்டை சிவில் நிர்வாகங்களில் உட்புகுத்துவது புதியதொரு சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. தமிழர் தேசத்தின் சிவில் நிர்வாகத்தில் படைத்தரப்பின் தலையீடு ஏற்கனவு அதிகரித்துள்ள நிலையில் இந்த் தாக்கத்தை சிங்கள மக்களும் உணரத் தலைப்பட்டுள்ளார்கள். கல்வித்துறையில் படைத்தரப்பின் செல்வாக்கை உட்புகுத்தும் சட்டமூலத்துக்கு எதிரான போராட்டங்களில் சிங்கள மக்கள்மீதும் தனது அடாவடித்தனத்தை சிங்கள-பௌத்த பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி பதவியேற்றபின்னர் இந்த படைத்தரப்பின் ஆதிக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளது. கொரோனாக் கட்டுப்படுத்தல் செயற்குழுவின் மாவட்டத் தலைமையதிகாரிகளாக படைத்தளபதிகள் நியமிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த கொரொனா நடவடிக்கைகளுக்குரிய் தலைமைப் பணிப்பாளராக ஜெனரல் சவேந்திர டி. சில்வா என்ற படைத்தளபதியே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதைவிட கிட்டத்தட்ட நாற்பது வரையான படைத்தளபதிகள் இலங்கைத்தீவின் சிவில நிர்வாகக் கட்டமைப்புக்களில் பணயமர்த்தப்பட்டுள்ளார்கள்.
தற்போது, படைத்தரப்பிலிருந்து ஓய்வுபெற்றுச் சென்ற வீரர்களை ஐந்தாண்டு சிறப்புத் திட்டத்தில் பணிக்கமர்த்துவதற்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்த வீரர்கள் சமூகத்தைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்து. சமூகக் குற்றச்செயல்களைக் கண்காணித்தல், சமூக வலைத்தளங்களையும் இணையத்தளங்களின் செயற்பாடுகளையும் கண்காணித்தல், அனர்த்த நிவாரணப் பணிகள் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
கிட்டத்தட்ட மக்களைப் புலனாய்வு செய்யும் பணிக்கென இந்தப் புதிய கட்டமைப்பு முன்னாட் படையினரைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. இதன் செயற்பரப்பு சிங்களமக்கள் வாழும் பிராந்தியங்களிலேயே பெருமளவு அமையப்போகின்றது. அரசுக்கெதிரான கருத்துக்களையும் போராட்டங்களையும் கட்டுப்படுத்தல் என்பதே இதன் பின்னாலுள்ள முக்கிய நோக்கமென மனதவுரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்தும் வீங்கிப்பெருக்கும் பூதமாக தீனிபோட்டு வளர்க்கப்படும் இந்த இலங்கைப் படைத்தரப்பு கட்டுப்படுத்தப்பட முடியாத ஒரு பெருந்தலையிடியாக சிங்கள் மக்களுக்கே அமையப்போகின்றது என்பதே வரலாற்றுப் பேருண்மையாக அமையப்போகின்றது.

No comments:
Post a Comment