உலகம் முழுவதும் கொரோனாத் தொற்றில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அனைத்து நாட்டுப் பொருளாதார நிலையும் தளம்பிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பல நாடுகள் தம்மால் இயன்றளவுக்கு நாட்டைச் சிறப்பாக நிர்வகித்து வருகின்றன. கொரோனாத் தொற்றும் பொருளாதார நெருக்கடியும் உலகம் முழுவதற்கும் பொதுவான போதும் இலங்கையில் இவ்விரண்டு சிக்கல்களும் மிகத்தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
கொரோனாத் தொற்றின் தாக்கத்துக்கு சாட்டுக்களைச் சொல்ல முடிந்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு எதையும் சொல்ல முடியாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது. இந்த நெருக்கடிக்கு கொரோனாவைச் சாட்டாகச் சொல்வதையும் அறிவார்ந்த தளத்தில் யாரும் ஏற்கவில்லை.
இந்தப் பொருளாதார நெருக்கடி மிக நீண்டகாலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒரு விடயம்தான். அளவுக்கதிகமான பாதுகாப்புச் செலவு, உருண்டு திரண்டு பெரும் பூதமாக வளர்ந்து விட்டிருக்கும் இராணுவக் கட்டமைப்புக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமை என்பவற்றோடு, முறைகேடான பொருளாதார அணுகுமுறை, கடன்கள், குடும்ப ஆட்சி என்ற பல்வேறு காரணங்களும் உண்டு.
நாட்டின் பணம் வெளியே செல்லக்கூடாதென்பதற்காக இறக்குமதியாகும் உணவுப் பொருட்களை மட்டுப்படுத்துவது வரை நிலைமை சென்றுவிட்டது. அங்கர் பால்மா மீதான இறக்குமதிக் கட்டுப்பாடு இலங்கைத்தீவு முழுவதையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இரண்டு கிழமைகளின் முன்பு அவசரகால பொருளாதார நிலையை ஜனாதிபதி விதித்தார். சிறிலங்காவின் பணப்பெறுமதியின் அபரிதமான சரிவும், உள்நாட்டில் அதிகரித்துக்கொண்டிருந்த விலையேற்றமும் பாரியளவு நாட்டின் பொருளாதாரத்தைத் தாக்கியது. ஆசியாவிலேயே கொரோனாப் பேரிடர் காலத்தில் வட்டி வீதத்தை அதிகரித்த மத்திய வங்கி இலங்கையினதுதான்.
கண்டபடி எல்லோரிடமும் கடன்வாங்கி இவ்வளவுநாளும் காலத்தைக் கடத்திய நாடு கடனை மீளச்செலுத்தும் தன்மையில் மிகப்பெரும் இக்கட்டை எதிர்நோக்கியுள்ளது. இதன் விளைவு, நாட்டின் இறைமை கடன் கொடுத்த தரப்புக்களிடம் சமரசமாக்கப்படும் அபாயத்தை எட்டியுள்ளது.
ஐநா மனிதவுரிமை கூட்டத்தொடரில் வாய்மொழி அறிக்கையை சமர்ப்பித்த ஆணையாளர்கூட இந்தப் பொருளாதார நெருக்கடியையும், அவசரகால நிலைப் பிரகடனத்தையும் குறிப்பிட்டு, இவை சிவில் நிர்வாகங்களில் இராணுவத் தலையீட்டை அதிகரித்து மனிதவுரிமை மீறல்களை இன்னும் ஊக்கப்படுத்துமென கவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்மக்கள் மீதான போர் வெற்றியை மூலதனமாக்கி அரசியலைச் செய்துகொண்டிருக்கும் சிங்கள – பௌத்த பேரினவாத அரசு கடந்தகாலத் தவறுகளின் விளைவை எதிர்நோக்கத் தொடங்கியுள்ளது. சிக்கல்களை எதிர்கொள்ள ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் சிங்களப் பெரும்பான்மை மக்களையும் தாக்கத் தொடங்கியுள்ளது. பேரினவாதச் சிந்தாந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த ஆட்சியின் கோரமுகத்தை சாமானியச் சிங்களவர்களும் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்பதே தற்போதய யதார்த்தம்.

No comments:
Post a Comment