காலங்காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம்தான் 13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழர்க்குரிய தீர்வை வழங்கல் என்பது. தற்போது இது மீளவும் சூடான பேசுபொருளாக மாறியுள்ளது. 13ஆம் திருத்தச் சட்டத்தை “அதிகாரப் பகிர்வு“ அடிப்படையிலான ஒரு விடயமாக முன்னிறுத்தி எமது எதிரிகளோ பிராந்திய வல்லரசோ மட்டுமல்ல, தமிழ் அரசியல் தலைமைகள் கூட அவ்வப்போது பேசி வருகிறார்கள்.
அதிகாரப் பகிர்வென்பது உலகில் காணக்கூடிய ஒவ்வொரு சமூகத்தினதும் தம்மைத் தாமே தக்க வைத்துக் கொள்வதற்கான உரிமை ஆகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு முறையில், அதிகாரப் பரவலாக்கல் நிகழ்ந்திருக்கின்றது; நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இனங்களுக்கிடையிலோ பிரதேசங்களுக்கு இடையிலோ முரண்பாடுகளற்ற – அல்லது ஒப்பீட்டளவில் முரண்பாடுகள் குறைக்கப்பட்ட நிலையில் நாட்டின் நிர்வாகம் சீராக இயங்குவதற்கு இந்த அதிகாரப் பரவலாக்கம் என்பது இன்றியமையாதது. அவ்வகையில் ஒருமித்த இலங்கைத்தீவுக்கு வாழ்வதென்றால் மீளப் பெறப்பட முடியாத நிரந்தர அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாக வைத்த ஒரு தீர்வை தமிழ்மக்கள் வேண்டி நிற்கிறார்கள்.
இதுவொன்று மிக அண்மையில் எழுந்த கோரிக்கையன்று. இலங்கைத்தீவு பிரித்தானியரிடமிருந்து விடுதலைபெற்ற நாள் முதற்கொண்டு இதைத்தான் தமிழர்கள் கேட்டு வருகிறார்கள். இவை நடைமுறைக்கு வராதபட்சத்தில் பிரிந்துசென்று தனிநாடாக வாழும் உரிமையை ஒரு தெரிவாக முன்வைத்துப் போராட்டத்தையும் முன்னெடுத்தார்கள்.
ஆனால் இந்த 13ஆம் திருத்தச் சட்டமென்பது “மீளப் பெறமுடியாத அதிகாரப் பகிர்வு“ என்ற வகைக்குக் கிட்டவும் வரமுடியாத ஒருவகைத் தீர்வு. இதை ஒரு தீர்வு என்று சொல்வதுகூட அபத்தமானது. இந்தத் திருத்தச்சட்டம் அன்றைய நேரத்தில் இந்திய அரசின் பிராந்திய நலனுக்குரிய “தீர்வு“ என்ற அடிப்படையிலே அமைந்தது. மாறாக அரசியப் பிணக்கைக் கொண்டிருந்த தமிழர் – சிங்களவர் ஆகிய இருதரப்புமே ஏற்றுக்கொள்ளாத ஒரு “தீர்வு“ என்பதே வரலாற்று உண்மை.
இப்போதும் சிங்களப் பேரினவாதம் இந்த 13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்குமென்று கருதுகிறது. தமிழரின் அரசியல் உரிமைகள் சார்ந்து வலுவான பாதுகாப்போ தீர்வோ இல்லாத ஒரு நிர்வாக நடைமுறையைத் தீர்வாகத் திணிப்பதைக்கூட தமிழர்களுக்குச் சார்பான ஓர் அம்சமாகக் கருதுமளவுக்குச் சிங்களப் பேரினவாதம் அன்றும் இன்றும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வருகிறது.
இலங்கைத்தீவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக இந்திய அரசுக்கு இந்த 13ஆம் திருத்தத்தை உயிர்ப்போடு வைத்திருப்பது அவசியம். அதற்காகவே பல்வேறு வழிகளில் அது இந்த வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது. தமிழரின் அரசியல் தலைமைகளுள் ஒருதரப்பு எப்போதும் இந்த உப்புச் சப்பற்ற 13இற்குள் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
ஈழத்தமிழர்களின் போராட்டம் தாண்டிவந்த தடைகள் பல. ஈழத்தமிழினம் ஏற்படுத்திய நல்லிணக்க முயற்சிகளும் விட்டுக் கொடுப்புக்களும் பல. ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை படிப்படியாகப் புடம்போடப்பட்டு இறுதியில் ஏற்படுத்தப்பட்ட வடிவமும் வேறு. இந்நிலையில், எந்நாளும் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வாக அமைய முடியாத ஒரு நிர்வாகப் பொறிமுறை மீளமீள தமிழர் தலையில் சுமத்தும் அபத்தத்தை தமிழர்களே முறியடிக்க வேண்டும். இந்த 13ஆம் இலக்க வண்டில் விளையாட்டுத் தொடர்பாக தமிழர்கள் விழிப்பாக இருப்பது அவசியம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழர் ஒடுக்குமுறை நாள்!
பெப்ரவரி 4 என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு கரிநாளே. இலங்கைத்தீவை விட்டுச் சென்ற பிரித்தானியர் தமிழினத்தின் தலைவிதியை சிங்களப் பேரினவாதத்திடம் ஒப்படைத்துச் சென்றநாள் இது. 1948 இலிருந்து இந்தநாள் தமிழர்களுக்குக் கரிநாளாகவே அமைந்துள்ளது.
இந்தநாளை எதிர்த்து அரசியல் வடிவில் தமிழர்கள் கிளர்ந்தனர். கறுப்புக் கொடி போராட்டம், துக்கநாளாகப் பிரகடனப்படுத்தியது, கடையடைப்புக்கள், பணிப்புறக்கணிப்புக்கள் என வெவ்வேறு வடிவங்களில் இந்த எதிர்ப்பைத் தமிழர்கள் காட்டி வந்துள்ளார்கள். திருமலை நடராசனின் ஈகம் முதற்கொண்டு இந்நாள் தமிழர்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்த வரலாற்றுத் தடங்கள் நிறையவுண்டு.
எமது விடுதலைப் பயணத்தில் பல்வேறு அரசியற் செயற்றிட்டங்களுள் நாட்களைப் பிரகடனப்படுத்தி நினைவுகூர்தல் என்பதும் முக்கியமான ஒரு செயற்பாடே. அவ்வகையில பெப்ரவரி 4ஆம் நாளை “தமிழர் ஒடுக்குமுறை நாள்” (Tamil Oppression Day) என்ற பெயரில் புலம்பெயர்ந்த நாடுகளில் சிலவற்றில் கவனயீர்ப்பு நிகழ்வாக மேற்கொண்டு வருகிறார்கள். உலகத் தமிழினம் இதேபோன்று இந்நாளை ஒரு பெயரின்கீழ் பிரகடனப்படுத்தி தொடர் கவனயீர்ப்பைச் செய்வதன் மூலம் உலகுக்கு எமது விடுதலை வேட்கையையும் எம்மீதான அடக்குமுறை வரலாற்றையும் வெளிப்படுத்த முடியும்.

No comments:
Post a Comment