2021 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் வெளிவரும் தேசத்தின் குரல் சஞ்சிகையில் வாசகர்களைச் சந்திக்கின்றோம். கடந்த ஆண்டைப் போலவே பல சவால்களோடு இவ்வாண்டும் எம்மிடமிருந்து விடைபெறுகின்றது.
உலகம் முழுவதும் “கொரோனா“ பெருந்தொற்றின் பிடியிலிருந்து படிப்படியாக மீண்டுவந்து கொண்டிருந்தாலும் அக்கிருமியும் பல்வேறு அவதாரங்களெடுத்து மனித குலத்தோடு பொருதிக்கொண்டே இருக்கிறது. பலவிதமான நம்பிக்கைகளை விதைத்துச் செல்கின்றவேளை, சவால்களையும் கூடவே விட்டுச் செல்கின்றது இந்த 2021.
தமிழ்மக்களைப் பொறுத்தவரை இந்த 2021 சொல்லிக்கொள்ளும்படியான அடைவுகளை சர்வதேச மட்டத்தில் கொண்டிருக்கவில்லை. ஆனால் மக்களின் போராட்டப் பாதையில் சில மைற்கற்களை இவ்வாண்டு தடம்பதித்துச் செல்கின்றது. இவற்றில் சிகரம் வைத்தாற்போல் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை“ என்ற மாபெரும் மக்கள் பேரணி தமிழர் தேசத்தின் அந்தங்களை இணைத்து நிகழ்ந்தேறியுள்ளது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்தப் பேரணிக்கு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு வகிபாகம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
இதேவேளை, தாயகத்தில் பெருந்தொற்றின் பாதிப்பால் எமது மக்கள் பரிதவித்த வேளையில் புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்போடு கணிசமான வாழ்வாதார உதவிகள் மேற்கொள்ளப்பட்டு இடர்காப்புப் பணிகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட்டது.
எவ்வளவோ அடக்குமுறைகள் நிகழ்ந்தாலும் மக்கள் தன்னெழுச்சியாகவே நினைவேந்தல் நிகழ்வுகளைத் துப்பாக்கி முனைகளின் முன்பாகத் துணிந்து நின்று செய்வதன் ஊடாக உலக அரங்கில் தமது விடுதலை அவாவைத் துல்லியமாகப்பதிய வைத்துள்ளார்கள்.
இலங்கைத்தீவின் பொருளாதார நிலைமையின் சீரழிவும் அதன் விளைவாக புகோள அரசியலில் அத்தீவின் மீதான பிராந்திய சக்திகளின் ஆதிக்க சமநிலைக் குழப்பங்களும் இவ்வாண்டின் முக்கியமான பேசுபொருளாக அமைந்துள்ளது. இலங்கைத்தீவின் வளங்கள் மட்டுமல்ல, இறைமையே இந்த வல்லாதிக்கப் போட்டியில் பறிபோய்க்கொண்டிருப்பதை இவ்வாண்டு பட்டவர்த்தனமாகச் சுட்டி நிற்கின்றது.
இந்தப் பூகோளச் சமநிலைக் குழப்பங்களையும் அதன்வழியான வல்லாதிக்க சக்திகளின் போட்டிகளையும் சரிவரக் கையாண்டு தமிழர்தேசம் தனக்கான விடுதலையைப் பாதையைச் செப்பனிட்டு நகர வேண்டிய தேவையை வலியுறுத்தி இவ்வாண்டு எம்மிடமிருந்து விடைபெறுகின்றது.
“இதுவும் இன்னோர் ஆண்டே“ என்று சராசரியாக ஓராண்டைக் கடத்தாமல் எதிர்வரும் புத்தாண்டை புதிய நம்பிக்கைகளோடு நாம் எதிர்கொள்வோம்.
2021இல் எம்மோடு பயணித்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றியைக் கூறி தேசத்தின் குரல் விடைபெறுகின்றது.

No comments:
Post a Comment