மீண்டுமொரு மார்ச் மாதம் வரப்போகிறது. மீண்டுமொரு முறை ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமை கூட்டத் தொடர் நடக்கப் போகிறது. மீண்டும் தமிழர் அரசியல் ஜெனிவாவைச் சுற்றி ஒருமாதகாலம் பேசப்படப் போகிறது. சிறிலங்கா தொடர்பாக மீண்டுமொரு பிரேரணை முன்வைக்கப்படப் போகிறது, அது குறித்து விவாதங்கள் நடந்து இறுதியில் ஒரு வடிவம் வெளிவரப் போகிறது.
கடந்த பன்னீராண்டுகளுக்கும் மேலாக இந்த ஜெனிவாச் சுற்றுவட்டம் சுழன்றுகொண்டே இருக்கிறது. தமிழர் அரசியலில் இந்த வட்டத்தின் சுழற்சி ஓரிடத்திலேயே நின்று சுழன்றுகொண்டிருப்பதாகவே கணக்கிட வேண்டியுள்ளது.
வாக்குரிமையுள்ள 47 நாடுகளிடத்தில் ஒரு பிரேரணைக்குரிய விவாதங்கள் நடந்து இறுதியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். அப்போது தாம் சார்ந்த அணிகளின் தலைமை நாடுகளின் உத்தரவுக்கமைய தமது வாக்குகளை இந்நாடுகள் குறித்த பிரேரணை மீது வழங்கும்.
கடந்த ஆண்டுகளில் இலங்கை தொடர்பான பிரேரணைகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையிலேயே வழிந்தோடி வந்திருக்கின்றன. தமிழர்கள் ஒரு தேசிய இனமென்பதைக்கூட குறிப்பிட முடியாத பிரேரணைகளைக் கடந்து வந்திருக்கிறது இந்த மனிதவுரிமை கூட்டத்தொடர். பன்னாட்டு விசாரணை, பன்னாட்டுக் கண்காணிப்புடன் கலப்புப் பொறிமுறை விசாரணை, உள்ளக விசாரணை, பிறகு அதுவுமில்லை என்று புதுப்புது சொல்லாடல்களும், விளக்கங்களும் காலத்துக்குக் காலம் வழங்கப்பட்டு இந்த கூட்டத் தொடர்ப் பிரேரணைகள் நிகழ்ந்தேறியிருக்கின்றன.
உண்மையில் இலங்கை மீதான தமது பூகோள நலன்களுக்காகவே தமிழரின் இனப்பிரச்சனையையும் இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களையும் புறச்சக்திகள் கையாள்கின்றன. இதற்கு இந்த மனிதவுரிமை கூட்டத் தொடரைப் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், இந்த ஜெனிவாக் கூட்டத்தொடரை தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டுமா என்றால், இல்லையென்பதே பதில். முடிந்தவரை இந்தக் களத்தையும் எமக்குரியதாக மாற்றிப் போராட வேண்டும். இன்றைய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் பொருளாதாரச் சிக்கலைத் தாண்டி எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் அல்லது அழுத்தம் இந்த ஜெனிவாக் கூட்டத்தொடர் என்றே சொல்லலாம். பன்னாட்டுச் சமூகத்துக்கும் இலங்கை அரசியலில் தலையிட இருக்கும் முக்கிய துருப்புச்சீட்டாக இந்த ஜெனிவாத்தளம் இருக்கிறது.
இந்தத் தளத்தில் எமது பலவீனத்தை வெளிப்படுத்தி எதிரிக்குப் பலத்தைச் சேர்க்கும் நிலைக்குத் தமிழர்கள் சென்றுவிடக் கூடாது. குறிப்பாக, தமிழரின் கோரிக்கைகள் தொடர்பில் இருக்கும் அணிப்பிளவுகளும் பல்வேறு அணுகுமுறைகளும் எதிரிக்கே சாதகமாக அமைந்துவிடுகின்றன.
ஜெனிவாக்களத்தைப் பயன்படுத்துவோர், அதில் செயற்படுவோர் பொது வேலைத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் அதற்குரிய வரையறைகளோடு ஜெனிவாவை அணுக வேண்டும். அதேநேரம் உண்மைத்தன்மையுடன் தமிழ்மக்களை அணுகி அவர்களைத் தெளிவுபடுத்தவும் வேண்டும்.
மீண்டுமொரு மார்ச் மாதமும் மீண்டுமொரு கூட்டத்தொடரும் என்று சலிப்படைந்து விடாதபடி இம்முறை ஜெனிவாச் சக்கரம் உருளட்டும்.

No comments:
Post a Comment