தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரஸ்யா – உக்ரெய்ன் போரானது நவீன காலத்தில் நாம் கண்ட ஒரு பெரும்போர். “பெரும்“ என்ற சொல் குறிக்க வருவது, அதன் படைப்பல, ஆட்பல, பொருளாதாரப் பல நிலைகளில் இருந்து மட்டுமில்லை. கிட்டத்தட்ட முழு உலகையும் ஏதோவொரு விதத்தில் இதில் ஈடுபட வைத்திருப்பது அல்லது இப்போரின் பாதிப்பை உணர வைத்திருப்பதைக் குறிக்கிறது. கிட்டத்தட்ட முதன்மை நாடுகள் அனைத்துமே ஏதோவொரு வழியில் தொடர்புபட்ட நிலையில் பயணிக்கிறது இந்தப் போர்.
பன்னாட்டுச் சமூகம், பொது அமைப்புக்கள், நாடுகள் என்பவற்றின் நிலைப்பாடுகளைப் பார்த்தால், அவை தமது நலன்சார்ந்து எப்படியும் செயற்படும் என்பதை இப்போர் தெளிவுறக் காட்டியிருக்கிறது. தாம் ஏற்படுத்தி வைத்திருந்த சட்டங்களை தமக்கு விரும்பியபடி வளைத்துப் பயன்படுத்த இவை துளியும் பின்னிற்கா என்பதை இப்போர் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
தமது நலன்களுக்காகப் போர் செய்யும் உக்ரெய்ன் அரசு எடுக்கும் எந்நடவடிக்கையையும் ஆதரிக்கும் மேற்குலகம் அதே வரையறைகளை ஈராக்கிலோ, ஈரானிலோ, சிரியாவிலோ, பாலஸ்தீனத்திலோ, குர்திஸ்தானிலோ, காஷ்மீரிலோ – ஏன் ஈழத்திலோ கூட பயன்படுத்துவதில்லை. அங்கே எதிர்நிலையில் நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. இன்று நினைத்த மாத்திரத்தில் போர்க்குற்ற விசாரணைக்குப் பணித்தல், பொருளாதாரத் தடை, பயணத்தடை, இராஜதந்திர அழுத்தங்கள் என அனைத்தையும் தமது வசதிக்கேற்ப இரஸ்யா மீது திணிப்பதற்கு அனைத்து நாடுகளுக்கும் மனதும் சட்டவசதிகளும் வந்துவிடுகின்றன.
ஆக, தத்தமது நலன்களுக்கேற்பவே பன்னாட்டுச் சக்திகள் நகர்கின்றன என்ற விழிப்புணர்வோடு ஈழத்தமிழர்கள் பயணிக்க வேண்டும்.
-------------------------------------------
பாதாள விழிம்பில் நிற்கும் இலங்கை அரசு
இலங்கைத் தீவின் பொருளாதாரம், அரசியல் உறுதித்தன்மை என்பன அதள பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக இரஸ்ய – உக்ரெய்ன் போர் தொடங்கிய பின்னர் சடுதியாக பெரும் நெருக்கடியை நாடு சந்தித்துள்ளது. உண்மையில் இந்நிலை இப்போரின் விளைவால் வந்ததன்று. மாறாக யுத்த வெற்றி வாதத்தில் திளைத்தபடி பொறுப்பற்ற முறையில் நாட்டை நிர்வகித்ததும் முறையற்ற பொருளாதாரக் கோட்பாடும், வரைமுறையற்ற கடன் வாங்கலும் என பல்வேறு காரணிகள் ஊடாக இந்த நிலையை நாடு அடைந்திருக்கிறது. இனவாதத்தை முதலீடாக வைத்து சிங்கள தேசம் அரசாளும்வரை இந்த நிலை இன்னுமின்னும் மோசமாகவே நகரும்.
தமது நலன்களுக்கான சிறிலங்கா அரசின் இனவாதப் போருக்கும் உதவியளித்த சக்திகள் தமது நலன்களுக்கான அத்தீவைப் பந்தாடியபடியே இருப்பார்கள். தமது போர் நாயகர்கள் உண்மையில் நாட்டை அழிவுப்பாதைக்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பதை சிங்களவர்கள் புரியத் தொடங்கும் காலம் வந்தடைந்துள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.

No comments:
Post a Comment