பொறிக்குட் சிக்காமல் போராடுவோம் - தேசத்தின் குரல்

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, January 5, 2023

பொறிக்குட் சிக்காமல் போராடுவோம்

 

இலங்கையின் பொருளாதாரச்சரிவு நிலை மீண்டும் எகிறிக்கொண்டு செல்கிறது. எரிபொருள் நெருக்கடி, பாடசாலைகள் மீண்டும் முடக்கம், அவசர அம்புலன்ஸ் சேவைகள் ஒருவாரத்துக்கு முடக்கம் என இலங்கை நிலவரம் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இத்தனை பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சிங்கள அரச இயந்திரமும் பெளத்த தேரவாத குழுக்களும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் மண்பறிப்பு நடவடிக்கைகளையும் தொடருகின்றன.

இன்னொருபுறம் தமிழீழ மக்களின் இனப்பிரச்சனைகளுக்கான தீர்வுத்திட்ட நாடகங்கள் பல துருவங்களில் இருந்தும் கொழும்பின் அரசியல் மேடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தம் தேய்ந்து பதின் மூன்றாம் திருத்தச்சட்டமாகி பின்னர் மேற்குலகத் தலையீட்டால் மேலும் மெருகூட்டப்பட்ட சமஸ்டி பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமாகி இருக்கின்றன.

சமஸ்டி முறையிலான தீர்வுத்திட்டத்திற்கு தேரவாத சித்தாந்தம்கொண்ட சிங்களத்தமிழர்களும் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடிய ஒருபகுதி சிங்கள மக்களும்  ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

அதனால்தான் அமெரிக்க இராஜ தந்திரிகள் தமிழ் மக்களுக்குத் தீர்வாக சமஸ்ரிமுறையை பரிந்துரைத்தபோது இலங்கை சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை மறுத்து தமிழ் மக்களுக்கு பிச்சையிடும் தீர்வாக மாவட்ட சபைத்தீர்வினை முன்வைத்து தமிழர் நிலங்களை கபளிகரம் செய்யும் வழமையான  நரித்தன நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகின்றார்.

அதனால்தான் அமெரிக்க இராசதந்திரிகள் ரணிலுடன் பேசும்போது ஈழத்தமிழர்களுடன் பேசி அவர்களது சம்மதத்துடன் புரையோடிப் போயிருக்கின்ற  இனப்பிரச்சனைக்கு ஒரு முடிவைக்கண்ட பின்னர் நாங்கள் தங்கள் நாட்டிற்கான நிதியாதரவுகளை செய்கின்றோம் என்று கூறிவிட்டு நகர்ந்துள்ளனர். திட்டம் பலிக்காத ரணில் விக்ரமசிங்க அவர்கள் மாவட்ட சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது எனும் நயவஞ்சக நகர்வொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் பேச்சுவார்த்தை நாடகமாடி காலத்தை இழுத்தடித்து,மேற்குலகை ஏமாற்றி நிதி ஆதரவை பெற்றுக்கொள்வது. இன்னொரு வகையில் மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் தீர்வுத்திட்டத்தினூடாக வடக்கு,கிழக்கு தமிழர் நிலங்களை கபளீகரம் செய்து சிங்கள பெரும்பாண்மையதிகாரத்தை வடக்கு கிழக்கில்  நிலை நிறுத்துவதே அவரது திட்டமாக இருக்கிறது.

இதற்கு முத்தாய்ப்பாகவே சமநேரத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லைகளை மீழ் நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளில் ரணில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

எனவே இவ்வாறான சூழல்களை கவனத்தில் எடுத்து தமிழ் அரசியல் தலைமைகள் விடாப்பிடியாக இருந்து மேற்குலகத்தின்  மத்தியஸ்த்துடனான பேச்சுவார்தைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து  சுய நிர்ண உரிமைக்கோரிக்கையுடனான தீர்வுத்திட்டத்தை நோக்கிய நகர்வுகளை மேற்கொள்வதே இப்போது உள்ள தெரிவாக இருக்கின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages