இலங்கைத் தீவில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அசாதாரண சூழ்நிலை அண்மையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பெருகிவந்து இன்று ஒரு கொதிநிலையை அடைந்துள்ளது.
தமிழர்களை அடக்கவிட்டோமென்ற மமதையில் ஆட்டம்போட்ட சிங்களப் பேரினவாதம் இன்று போர் வெற்றி வாகையின் விளைவுகளையும் யதார்த்தத்தையும் உணரத் தொடங்கியுள்ளது. அது தனக்குள்ளேயே பிய்த்துப் பிடுங்கத் தொடங்கியுள்ளதன் வெளிப்பாடுடதான் தற்போது இலங்கைத்தீவில் – குறிப்பாக தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் நிலவி வரும் கொந்தளிப்பு.
தொடக்கத்தில் வெறும் கொந்தளிப்பின் அடிப்படையில் ஆங்காங்கே உருவான கலகங்கள் தற்போது ஏதோவொரு விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அளவில் சீராக நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. போராட்டங்களில் தொடக்கத்திலிருந்த உணர்ச்சிமயநிலை படிப்படியாக மங்கி ஒருங்கிணைக்கப்பட்ட வடிவில் பயணிக்கத் தொடங்குகிறது.
மக்களை கொதிப்படையவும் வீதியில் இறங்கவும் துாண்டியது அன்றாட வாழ்வியலை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு மக்களைத் தள்ளியபோதுதான். வெறும் அரிசி, பருப்பு, பால்மா, எரிபொருள், எரிவாயு என்பவற்றின் பிரச்சனைக்காக மக்கள் கிளர்ந்தார்களே ஒழிய, நாட்டின் அடிப்படை இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கிய விவாதங்களை இந்தப் போராட்டங்கள் இன்னமும் சரியாக ஏற்படுத்தவில்லை. இந்த இடத்தில்தான் இந்தப் போராட்டங்களில் தமிழர்களின் வகிபாகம் எப்படியிருக்க வேண்டுமென்ற வினா எழுகின்றது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழரின் மீதான அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் இப்போராட்டங்களில் ஒலித்தாலும், அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனை என்ற மையப்புள்ளியைத்தாண்டி போராட்டக்களமோ பொது விவாதமோ இன்னும் நகரவில்லை. அதற்கா தமிழர்கள் முற்றுமுழுதாக இந்தப் போராட்டக்களத்திலிருந்து ஒதுங்கியிருக்கத் தேவையில்லை. மாறாக இதன்வழியாக எங்களின் வலிகளை உணர்த்துவதற்கும் எமக்கான நீதியைப் பெறும் அவாவை வெளிப்படுத்துவதற்கும் இதையொரு கருவியாகப் பயன்படுத்தலாம்.
உலகக் கவனம் கொழும்பின்மீதும் இந்தப் போராட்டங்கள் மீதும் குவிந்திருக்கும் தருணத்தில் இதையொரு கருவியாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. மாறாக, ஆட்சி மாற்றத்துக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் எழுப்பப்படும் பொதுக் கோசங்களில் எமது குரல்களை அடகுவைத்துக் கரைந்து போகாமல் இருப்பதே மிக முக்கியம். சிறிலங்காவை ஒரே தேசமாகவும் இலங்கையர் அனைவரையும் ஒரே தேசிய இனமாகவும் பிரகடனப்படுத்தி சிங்கக் கொடியின் மீளெழுச்சிக்காவும் இந்தப் போராட்டங்களைத் திசைதிருப்பும் பெரும்பான்மைச் சூழ்ச்சிக்குள் தமிழர்கள் வீழ்ந்துவிடக் கூடாது.
ஈழவிடுதலைக்கான ஆதரவுப் போக்குள்ள சிங்கள முற்போக்குச் சக்திகள் இந்தப் போராட்டங்கள் ஊடாக சற்றுப் பலம்பெறுவதைக்கூட ஒரு முக்கிய அடைவாகத் தமிழினம் கருதி செயற்படலாம்.

No comments:
Post a Comment