தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டமென்பது காலத்துக்குக் காலம் பல்வேறு வடிவங்களையும் வழிமுறைகளையும் கைக்கொண்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வழிமுறைக்குமேற்ப போராட்ட வீச்சும் மக்களின் அணிதிரள்வும் மாறிமாறி வந்திருக்கிறது. சிலசமயங்களில் மெதுவாகவும் அமைதியாகவும் கடந்துவந்த காலகட்டங்களில் ஒருவித சலிப்புத்தன்மையோடு எமது போராட்டம் நகர்ந்த்தது போன்ற தோற்றப்பாடு எழலாம்.
ஆனால் என்றைக்கும் எமது போராட்டத்தின் வேட்கை அடங்கியிருந்ததில்லை. அது சிலவேளைகளில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று வந்திருக்கும். ஒட்டுமொத்த்தத்தில் பார்த்தால், நீண்ட நெடிய எமது போராட்டத்தை எமது இனம் அளவுகடந்த சகிப்புத்தன்மையோடும் அளப்பரிய அர்ப்பணிப்போடும் நகர்த்தி வந்திருக்கிறது.
காலநீட்சியில் சலிப்புத்தன்மையை அதிகம் சுவீகரித்துக்கொள்ளக்கூடிய ஏதுநிலைகளை உலகமும் எமது எதிரியும் திட்டமிட்டு ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்தச் சலிப்புத்தன்மையூடாக எமது மக்கள் எமது அரசியல் வேட்கையைக் கைவிட்டு ஒதுங்குவார்கள் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதிகூடிய சகிப்புத்தன்மையோடு எமது மக்கள் இந்தச் சதியை முறியடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது மிகப்பரவலாக எமது மக்களால் பல போராட்டங்கள் பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தொடர் போராட்டங்கள், காணி விடுவிப்புக்கான போராட்டங்கள் என்று கருக்கொண்ட மக்கள் போராட்டங்கள் இன்று பரந்து வியாபித்து நிற்கின்றன.
புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்மக்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் கொரோனா இடர்காலத்தின் மத்தியிலும் வீச்சுடன் நடாத்தப்படுகின்றன. சமநேரத்தில் எல்லா நாடுகளிலும் ஒருங்கிணைந்த முறையில் ஒரே கோரிக்கைகளோடு போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
பிரித்தானியாவில் நிகழ்ந்த உணவுத்தவிர்ப்புப் போராட்டமாக இருக்கட்டும், ஏனைய நாடுகளில் நிகழ்ந்த போராட்டங்களாக இருக்கட்டும், தாயகத்தில் அர்ப்பணிப்போடு நிகழ்ந்த- நிகழ்ந்துகொண்டிருக்கும் போராட்டங்களாக இருக்கட்டும்- அனைத்துமே உலக அரங்கில் தற்காலத்தில் மிக முக்கிய அதிர்வலைகளை ஏற்படுத்தியே இருக்கின்றன. ஒரு நோக்கிற்காக அணிதிரளும் வல்லமையையும் வேணவாவையும் எமது மக்கள் வெளிக்காட்டியிருக்கின்றார்கள்.
இவ்வேளையில்
இந்தப் போராட்டங்களை மடை மாற்றுகின்ற அல்லது நீர்த்துப் போகச் செய்கின்ற செயற்பாடுகள்
குறித்தும் எமது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. போராட்டக் களங்களை
எதிரியை நோக்கி வடிவமைப்பதுதான் முக்கியமேயன்றி தமிழர்கள் தமக்குள் பிளவுபட்டு நிற்பதற்கு
இப்போராட்டங்கள் களமாகக் கூடாது.
போராட்டங்களை வடிவமைப்போரும் வழிநடத்துவோரும் அதிகூடிய கவனத்துடன் செயற்பட வேண்டிய தருணமிது. மக்கள் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்து போராடப் புறப்படும் நேரத்தில் இப்போராட்டங்களை சரியான முறையில் ஒருங்கிணைத்தும் கூர்மைப்படுத்தியும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு தமிழர் அமைப்புக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் உரியது.


No comments:
Post a Comment