கவளம் - ஒரு நினைவு - தேசத்தின் குரல்

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 19, 2021

கவளம் - ஒரு நினைவு


எங்கட சொந்த பந்தங்களின்ர வகைதொகையளப் பற்றி
உங்களுக்குத் தெரியாது. அம்மம்மாவோட கூடப்பிறந்த எட்டுப்பேரும் ஒரே ஊரில தங்கி குடும்பங்களைப் பல்கிப் பெருகத் தொடங்கீட்டதால நல்லது கெண்டதெண்டா எங்கட சொந்தத்துக்குள்ளயே பெரிய கூட்டம் வந்திடும். எங்கட அம்மம்மாவின்ர மூன்றாவது சகோதரிய "சூட்டி" என்ற அடைமொழியோடு உறவுமுறையையும் சேர்த்துக் கூப்பிடுவோம். அதாவது சூட்டியக்கா, சூட்டியம்மா, சூட்டியம்மம்மா...

எனக்கு அவ 'சூட்டியம்மம்மா' எண்டாலும் அது 'சூட்டியம்மா' எண்டுதான் வாயில வரும். அதால ஒருசந்ததி முந்தியதாகக்கூடச் சொல்லலாம்.

எங்கட சொந்தத்துக்க ஏதாவது விசேசமெண்டா குறைஞ்சது ஓர் இரவெண்டாலும் எல்லாரும் அந்தவீட்டில தங்கிறது வழக்கம். எத்தினை நாளெண்டது விசேசங்களைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் எல்லாரும் ஒரே கிராமத்திலதான் (சொந்த ஊரில இருக்கும் வரைக்கும்) எண்டபடியா இது வசதியாயுமிருந்திச்சு. பல நாட்கள் அப்பிடியான நேரங்களில சின்னாக்களின்ர பட்டாளம் பெரிசா இருக்கும். விளையாட்டும் கும்மாளமுமாய்ப் பொழுது போகும். அந்த நாட்களில இரவுச்சாப்பாடும் அதற்கடுத்த நாள் காலைச்சாப்பாடும் பெரும்பாலும் **கவளம்** தான். அண்டைக்கு மத்தியானத்தான் கறி, சோறு எல்லாத்தையும் பிரட்டி, உருண்டையாத் திரட்டி, ஒவ்வொருவரும் வளமான கையில ஏந்திச் சாப்பிடுறதுதான் கவளம். அனேகமா அதுக்குள்ள இறைச்சியும் பருப்பும் கட்டாயமிருக்கும். மற்றக்கையில அப்பளப்பொரியலோ மிளகாய்ப்பொரியலோ இருக்கும்.

இரவு விளையாடிக்கொண்டிருக்கிற நேரத்தில எட்டரை - ஒன்பதுக்கு, "சின்னாக்கள் எல்லாரையும் சாப்பிட வரட்டாம்" எண்டொரு சத்தம் வரும். நாங்கள் உடனடியாக ஒன்றுகூடி விடுவதில்லை. விளையாட்டின் சுவாரசியத்தைப் பொறுத்து அது மாறுபடும். பிறகு நாலைந்து வெருட்டல்களுக்குப்பிறகு எல்லாரும் வந்து விறாந்தையில் குந்துவோம். அப்ப ரெண்டொருபேர் - அனேகமா விடலைப்பருவத்தில இருக்கிறவை, வந்து குந்தப் பஞ்சிப்படுவினம். தாங்கள் சின்ன ஆக்கள் இல்லையெண்ட நினைப்போட இருப்பினம். பிறகு நாலு நக்கல் வேண்டிக்கொண்டு வந்திருப்பினம்.

 

தனிய சின்னாக்கள் மட்டும்தான் எண்டில்ல, பெரிய ஆக்களும் சிலவேளை வந்து கவளத்துக்குக் குந்துவினம். எப்பிடியும் பதினைஞ்சு பேர் ஒரு பந்திக்கு வந்திடுவினம். பந்தியெண்டாப்போல வரிசையா இருக்கிறேல. கும்பலா இருப்பம். குந்திலயோ, குத்தியிலயோ இருக்கலாம். எழும்பிவந்து கவளத்தை வாங்கிக்கொண்டு போனால் சரி. இந்தக் கவளத்தைத் திரட்டித்தாறது எங்கட 'சூட்டியம்மா'தான் ("சூட்டியம்மம்மா" தான் சரியான சொல் எண்டாலும் நடைமுறையில நான் கூப்பிட்ட சொல்லையே இனி வாற இடங்களில பாவிக்கிறன்). நானறிய சூட்டியம்மா தவிர்ந்து வேற ஆக்கள் இப்பிடியான நேரங்களில கவளம் திரட்டி நான் பார்த்ததில்லை. அவதான் கவளம் திரட்ட வேணுமெண்டது எழுதப்படாத விதி. அவவின்ர உருவத்தைப் போலவே பெரிய சருவச்சட்டியில எல்லாத்தையும் குழைச்சுக் கொண்டு வந்து இருந்தாவெண்டா எல்லாரும் சாப்பிட்டு முடியத்தான் எழும்புவா. இப்பவும் அவ குந்தியிருந்து கவளம் திரட்டுறது மனசுக்க நிக்குது.

கவளத்தின்ர அளவு ஆக்களுக்கேற்ற மாதிரி மாறுபடும். சூட்டியம்மா ஆகப்பெரிசா திரட்டிற கவளம் ஒருநேரச்சாப்பாட்டுக்குக் காணும். நாங்களெல்லாம் வேலியில நிக்கிற பூவரசில நல்ல பெரிய இலையாப் பாத்துப் பிடுங்கி அதைக் கையில வைச்சு அதிலதான் கவளம் வாங்கிச் சாப்பிடுறது வழக்கம். கவளம் கொஞ்சம் ஈரப்பதனா இருந்தா விரல் இடைவெளியளுக்கால ஒழுகும் எண்டதால இப்படியொரு ஏற்பாடு. ஆனா வடிவாச்சாப்பிட்டா கைகழுவ வேண்டிய தேவையிராது. என்ர ஞாபகத்தில பூவரசமிலையும் கவளமும் பிரிக்க முடியாதவை.

கவளம் திரட்டிச் சாப்பிடுறது மிக அலாதியானது. நான் நாளாந்தம்கூட கவளம் திரட்டிச் சாப்பிட்டிருக்கிறேன். விடுமுறை நாட்களில் அம்மம்மா வீட்டில் எனக்கென்றே பழங்கறியும் சோறும் இருக்கும். ஒரு பிரட்டுப் பிரட்டி அம்மம்மா தாற கவளத்தை, சுட்ட 'சீலா'க் கருவாட்டோடை சாப்பிட்ட சுகம் தனி.

*************************************

இடம்பெயர்ந்து மானிப்பாய் வந்திருந்தோம். வந்த புதிதில் இரவு நேரத்தில் மத்தியானத்தான் சோறு கறிகளைப் பிரட்டி கவளமாக அம்மா தர, அப்பளப் பொரியலோடு சாப்பிடுவது வழக்கம். இது, அம்மாவுக்குச் சமைக்கப் பஞ்சியெண்டதால இல்லை. அது எங்களுக்குப் பிடிச்சிருந்திச்சு. அப்ப நானும் தங்கச்சியவையும் பக்கத்து வீட்டுக்காரரோட இரவு முத்தத்திலயிருந்து கதைக்கிறது வழக்கம். ஒருநாள்,

 

"இரவு என்ன சாப்பாடு?" எண்டு கேட்டீச்சினம்.

"கவளம்" எண்டு தங்கச்சி சொன்னாள்.

அடுத்த இரவும் அதே கேள்வி - அதே பதில்.

அடுத்த நாள் காலமை எங்கட அம்மாவிட்ட அந்த வீட்டுக்கார அம்மா வந்தா.

"இஞ்ச பிள்ள... நிங்கள் செய்யிற அந்த இரவுச்சாப்பாடு எப்பிடிச் செய்யிறதெண்டு ஒருக்காச் சொல்லித்தாறியளே?"

"என்ன சாப்பாடு?"

"அதுதான் கவளமோ... கிவளமோ..."

 

அம்மாவுக்கு அப்பதான் பிரச்சினை விளங்கீச்சு. பிறகு அவைக்கு விளங்கப்படுத்தினா. கவளம் எண்ட சொற்பாவனை எல்லா இடத்திலயும் இல்லையெண்டது அப்பதான் எனக்கு விளங்கீச்சு.

*************************************

நீண்டகாலத்தின்பின் சொந்தக்காரர் பலர் சந்தித்த ஒரு கொண்டாட்டமது. 2004 ஆம் ஆண்டின் தொடக்கம். கொழும்பு தொடக்கம் பல இடங்களிலிருந்தும் குடும்பத்தோடு எல்லாரும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். அதற்கு முன் பார்த்திராத பல முகங்கள். மழலைப் பட்டாளங்களை இன்னாரின் பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்தினார்கள். பத்துவருடத்தில் புதிதாக வந்த பல சொந்தங்களை அப்போதுதான் பார்த்தேன்.

வழமைபோலவே இரவும் வந்தது.

"பவளம் மாமி எல்லாரையும் சாப்பிட வரட்டாம்"

என்று 3 வயதுப் பிள்ளையொன்று எல்லோரையும் அழைத்தது.

"யாரது பவளம் மாமி? எனக்குத் தெரிந்து யாருமில்லையே? "

என்று நினைத்தபடி முற்றத்துக்கு வருகிறேன். அங்கே அதே சூட்டியம்மா சருவச்சட்டியோடு கவளம் திரட்டியபடி. அவவைச் சுத்தி சின்னப் பட்டாளமொன்று. அப்பதான் விளங்கிச்சு. அச்சிறுமி சொன்னது 'பவளம் மாமி' இல்லை, "கவளம் மாமி". சூட்டியம்மாவுக்கு, 'கவளம் மாமி' எண்டே பேர் வச்சிட்டுதுகள்.

சிலர் கையில Lunch sheet வைத்து அதில கவளத்தை வேண்டிச் சாப்பிட்டினம். அவையளில ஒரு பிரச்சினையுமில்லை. ஏனெண்டா பூவரசமிலை பறிக்க வேலியில்லை. அது சுத்துமதிலாகியிருந்திச்சு. இப்பிடி பட்டாளமாயிருந்து சூட்டியம்மாவிட்ட கவளம் வாங்கிச் சாப்பிட்டு ஏறத்தாள பத்து வருசமாகியிருந்திச்சு.

அண்டைக்கு நானும் ஆசைதீரக் கவளம் திரட்டிச் சாப்பிட்டன்.

கவளத்தின் அளவோ சுவையோ, திரட்டித்தரும் சூட்டியம்மாவோ, அவ குந்தியிருக்கிற நிலையோ எதுவுமே மாறவில்லை. கையிலே பூவரசமிலைக்குப் பதிலாக Lunch sheet. அவ்வளவுதான்.

 

-வசந்தன், அவுஸ்திரேலியா

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages