மே மாதமென்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஆறாவடுக்களைக் கனதியான நினைவுகளோடு கடக்கின்ற ஒரு மாதம். நவீன மானுட வரலாற்றில் மிகப்பெரும் இனவழிப்பை தமிழர்மீது நடத்தி மாபெரும் மனித அவலத்தை சிங்கள தேசம் அரங்கேற்றிய மாதம். முள்ளிவாய்க்காலில் இருந்தவர்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களுக்கும் இதுவொரு ஆறாத காயத்தைப் பரிசளித்த மாதம்.
ஆக, இதுவொரு மிகப்பெரும் துயரை நினைவுகொள்ளும் மாதமாக அமைகின்றது. எமது போராட்டத்தின் விழுதுகள் வீழ்ந்துபோன களமாக இந்த முள்ளிவாய்க்காலை பலரும் பார்க்கிறார்கள். முள்ளிவாய்க்கால் என்பதை தோல்வியின் குறியீடாகக் காட்ட எமது எதிரிகள் எத்தனிக்கிறார்கள். உலக வல்லரசுகளும் இந்தப் போக்கை உறுதிப்படுத்த விளைகிறார்கள். இனிமேல் விடுதலைப் போராட்டங்கள் முகிழ்ந்திடாமலிருக்கவும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும் முள்ளிவாய்க்காலை தோல்வியின் குறியீடாக நிலைநாட்டுவதற்குரிய எத்தனிப்புக்கள் நடைபெறுகின்றன.
ஓரினத்தின் எதிர்காலத்தைச் சூனியமாக்கிய நிகழ்வாக முள்ளிவாய்க்காலைப் பதிய வைக்கும் போக்கிற்குத் தமிழர்கள் பலியாகக் கூடாது. முள்ளிவாய்க்காலில் இருந்து தொடர்ந்து பயணிப்பதற்கான உத்திகளின் அடிப்படையிலேயே தமிழர்கள் பயணிக்க வேண்டும். முள்ளிவாய்க்காலைக் கருவியாகக் கொண்டு முன்னேற முயல வேண்டும்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி – ஒரு நம்பிக்கைக் குறியீடு
மே-18 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தமிழர்கள் பகிர்வதென்பது தற்போது பரந்தளவில் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் இறுதித் தஞ்சம் இந்தக் கஞ்சிதான், மக்களின் உயிர்நாடி இந்தக் கஞ்சிதான் என்ற அடிப்படையில் எமது மக்களின் பாடுகளை நினைவுகொள்ளும் விதத்தில் இந்தக் கஞ்சி வழங்கப்படுகிறது.
ஆனால் இதுவொரு நம்பிக்கையின் குறியீடு. மிகப்பெரும் அர்ப்பணிப்பினதும் தியாகத்தினதும் மக்கள்நலன் சார்ந்த அக்கறையினதும் வெளிப்பாடுதான் இந்தக் கஞ்சி. வெறுமனே அரிசியைக் கொதிக்கவைத்துக் கஞ்சி கொடுப்பது என்பதைத் தாண்டி, உயிரைப் பொருட்படுத்தாது, களைப்பைக் கவனிக்காது தன்னார்வமாகத் தொண்டாற்றும் அர்ப்பணிப்பு ஒருபுறம், என்னதான் பிரளயம் நடந்தாலும் கஞ்சி வழங்க வேண்டுமென்ற மக்கள் நலன்சார்ந்த கரிசனை ஒருபுறம் என்று இதன்பின்னால் மிகப்பெரும் வரலாறு பொதிந்துள்ளது.
நம்பிக்கையனைத்தும் பொய்த்துப் போய்விட்ட இறுதிநிலையிலும் கஞ்சி கொடுத்துக் கொண்டிருந்த நிர்வாக நடைமுறை உண்மையில் நம்பிக்கையின் குறியீடேதான். தப்பிப் பிழைத்தலுக்காக இறுதிமூச்சுவரை முயன்ற எம்மக்களின் வரலாற்றின் குறியீடு இந்தக் கஞ்சி.
ஆக, வெறுமனே முள்ளிவாய்க்கால் பாடுகளின் நினைவுக் குறியீடாக அன்றி, நம்பிக்கையின், மீளெளுச்சியின் குறியீடாக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி அமையட்டும். தனியே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் கஞ்சி வழங்குவதோடு சுருங்கி விடாமல் பரவலாக்கப்பட்ட விதத்தில் இந்தக் கஞ்சி பகிரப்பட்டு எம்மீதான இனவழிப்பைப் பன்னாட்டுமக்களிடம் பரப்புவதோடு நம்பிக்கையின் குறியீடாகவும் எமது தலைமுறைகளுக்குக் கடத்தப்படட்டும்.

No comments:
Post a Comment