நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு! - தேசத்தின் குரல்

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 19, 2021

நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு!

 


அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை, நாட்டுப் பற்றாளர் தினமாகத்  தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப்படுத்தியிருந்தது.  அன்னை பூபதியின் நினைவு தினத்தை,  நாட்டுப் பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்து வருகின்றார்கள் ! 


 


விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில், "நாட்டுப்பற்றாளர்கள்" எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!


இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த, இந்திய இராணுவம், ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது! அவ்வேளையில், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக, தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக, தமிழீழப் பொதுமக்கள், பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள்! இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக, தியாகத்தின் அதியுயர் வடிவமாக, அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது!!


 


‘இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்’- என்று கோரி, மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில், திருமதி பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள், அகிம்சை வழியில்  உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி சனிக்கிழமை காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ்அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணா நிலைப் போராட்டத்தை  ஆரம்பித்தார்!


தமிழீழ விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான வேளையைச் சந்தித்த காலம் அது! “இந்திய ராணுவம் எமது தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்த தினத்தையே எமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போராட்டத்தில் இந்திய ராணுவம் தலையீடு செய்தது ஓர் இருண்ட அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்” - என்று, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், இந்த இராணுவ ஆக்கிரமிப்புக் குறித்துக் கூறுமளவுக்கு, அன்றைய காலகட்டம் பல நெருக்கடிகளை நேர்கொண்டது.


 


உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்தியப் படையினர் ஒருபுறம், சிங்கள பௌத்தப் பேரினவாத சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் சிறிலங்காவின் இராணுவம் மறுபுறம், இவையிரண்டிற்கும் துணையாக நிற்கின்ற தமிழ் ஒட்டுக்குழுக்கள் ஒருபுறம், என்று ஈழத் தமிழினம் இன்னல்களை எதிர்கொண்ட வேளை அது! தேசியத்தலைவர் சொன்னதுபோல் தமிழீழப் போராட்ட வரலாற்றில் இருண்ட அத்தியாயத்தின் காலம் அது!


இத்தனை அபாயங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில், ஒரு சாதாரணப் பெண்மணி, குடும்பத் தலைவி, எவற்றிற்கும் அஞ்சாமல் தனது போராட்டத்தை அகிம்சை வழியில் ஆரம்பிப்பதற்கு, எத்துணை நெஞ்சுரமும், தியாக மனப்பான்மையும் அவருக்கு இருந்திருக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.


“எம்மைப் பாதுகாக்கவென வந்த இந்தியா, இன்று, சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிலும் கொடியவர்களாகவே மாறிவிட்டார்கள். இதனைத் தடுக்கலாம் என்ற உறுதியுடன், நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். வீரச்சாவுகளை கண்டு நாம் பழகிப் போனவர்களே! எனது இறப்பை அடுத்தும், எமது நோக்கை நாம் அடைவோம்! ஒருபோதும் அன்னையர் முன்னணி தளராது” - என்று அன்னை பூபதி அவர்கள் தியாக உணர்வோடு, நெஞ்சுரத்தோடு முழங்கினார்.


1988ம் ஆண்டு, மார்ச் மாதம், 19ம் திகதி, சனிக்கிழமை காலை, 10-45 மணிக்குத் தனது சாகும் வரையிலான உண்ணா நிலைப்  போராட்டத்தை ஆரம்பித்த, அன்னை பூபதி அவர்களின் இறுதி மூச்சு, தமிழீழக் காற்றோடு, ஏப்பிரல் மாதம், 19ம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை, 8-45 மணியளவில் கலந்து பரவியது. முப்பத்தியொரு நீண்ட நாட்கள்!


எந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக, அன்னை பூபதி அவர்கள் போராடினாரோ, அந்த இராணுவம் - இந்திய இராணுவம், பாரிய இழப்புக்களுடனும் அளவிடற்கரிய அவமானத்துடனும் தமிழீழத்தை விட்டு 24-03-1990 அன்று வெளியேறிச் சென்றது!


திருமதி பூபதி கணபதிப்பிள்ளை என்கின்ற, ஒரு சாதாரணத் தமிழ்ப் பெண்மணியின் விடுதலை வேட்கையும், அதற்கான தியாகமும்,  எம் நாட்டுப்பற்றின் சிகரமாக அமைந்தன!!


அன்னை பூபதியின் தியாகத்திற்கு முன்னரும், பின்னரும், தமிழீழத்தில் எத்தனையோ நாட்டுப் பற்றாளர்கள், வாழ்ந்திருக்கின்றார்கள். இன்றும் வாழ்ந்தும் வருகின்றார்கள்! அவர்கள் யாவருடைய நாட்டுப்பற்றும், தியாகமும் பங்களிப்பும், எந்த ஒரு விதத்திலும் எவருடைய தியாகத்திற்கும், குறைவானதல்ல!!  ஆயினும் சகல நாட்டுப் பற்றாளர்களினதும் ஒரு குறியீடாக அன்னை பூபதி அவர்கள் விளங்குவது ஒரு பொருத்தமான விடயம் என்றே நாம் கருதுகின்றோம்!


”திரு. சபேசன் சண்முகம் அவர்கள் அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய மிக முக்கிய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர். பல அரசியற் கட்டுரைகளை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு சுகவீனம் காரணமாக மரணித்த திரு சபேசன் அவர்களின் கட்டுரையின் ஒருபகுதி இங்கு வெளியிடப்பட்டுள்ளது.”


தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக, தமது பங்களிப்புக்களை நல்கி வந்த,

நல்கி வருகின்ற, சகல நாட்டுப்பற்றாளர்களில், தமிழ்ப் பெண்ணினத்தின் பங்களிப்பு என்பதானது,தனித்துவமானது! தமது இனத்திற்கு எதிராக நடத்தப்படுகின்ற ஆக்கிரமிப்புப் போர்களுக்கும்,வன்முறைகளுக்கும், பெண்கள் கொடுக்க கூடிய விலையும் அளப்பரியது! தங்களுடைய கணவன்மார்களையும், தங்களுடைய புதல்வர்களையும் அவர்கள் பறிகொடுத்தார்கள்! அந்நியப் படைகளின், பாலிய வல்லுறவுகளுக்கும் ஆளானார்கள்! தாங்களும் கொலை செய்யப்பட்டு இறந்தார்கள்! இவற்றிற்கும் அப்பால், தங்களது குடும்பங்களைப் பாராமரித்துக் கொண்டு, தமது நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கான பங்களிப்பினையும் தொடர்ந்து செய்து வந்தார்கள்!!


ஒரு போராட்டக் காலத்தில், பெண்ணின் பங்கு கணிசமானது என்பதைப் போராட்ட வரலாறுகள் இன்றும் உணர்த்தி நிற்கின்றன! போராளிகளுக்கு உணவு அளிப்பதுவும், உறைவிடம் தந்து உபசரிப்பதுவும், காயம் பட்டவர்களைப் பராமரிப்பதுவும் பெண்களாகத்தான் இருந்து வருகின்றார்கள்! தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில்,  தமிழ்ப் பெண்ணினத்தின் பங்களிப்பானது, உலக சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஒப்பீட்டளவில், உன்னத இடத்தை வகிக்க கூடிய ஒன்றாகும்!!


இந்த வகையில், ஒட்டு மொத்தத் தமிழீழப் பெண்களினதும், தமிழர்களினதும், ஆத்திரத்தினையும்,சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்தும் விதமாகவே, அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்தை நாம் கருத வேண்டும்! ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியிருந்தபடி, உலகத்தின் நான்காவது பெரிய இராணுவமான, இந்தியப் படைகளின் வன்முறைகளையும்,சிங்கள இராணுவத்தின் நெருக்கடிகளையும், தமிழ் ஒட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களையும்,  ஒருங்கு சேர எதிர் கொண்டு, அன்னை பூபதி, தனது அகிம்சைப் போராட்டத்தை, சாகும்வரை மேற்கொண்டது என்பதானது, விடுதலை வேட்கையின் உறுதியின் உச்சமானதுமாகும்!!


ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும், ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும், உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை நடாத்தி, உயிர்த் தியாகம் செய்திட்ட உலகின் முதற் பெண்மணி என்ற வகையிலும், ஒரு சாதாரணக் குடும்பப்பெண் தனது தனிப்பட்ட வாழ்வைத் துறந்து தனது நாட்டுக்காக முன்னெடுத்த உண்ணா நிலைப் போராட்டம் என்ற வகையிலும், அன்னை பூபதி அவர்களின் போராட்டம், பல விழுமியங்களை தொட்டு நிற்கின்றது இவர் ஒரு விடுதலைப் போராளி அல்லர்! விடுதலைப் போராளி என்ற வகையில், தியாகி திலீபன் அவர்கள், ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாநிலையில் இருந்து தனது இன்னுயிரை ஈந்திருந்தார்!! ஆனால் போராளியாக இல்லாத ஒருவர் - சாதாரணப் பெண்மணி - குடும்பத் தலைவி - தன்னைத் தன் மக்களுக்காக மட்டுமன்றி, தனது போராளிகளுக்காகவும், தன்னைத் தற்கொடையாக்கிய செயல் என்பதானது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்!!


மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தம் உயிரைத் தருகின்ற, போராளிகளின் இலட்சியத்திற்காகத், தன் உயிரைத் தாரை வார்க்க முன்வந்த, அன்னை பூபதியின் தியாகம்,  நாட்டுப்பற்றாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் ஒரு குறியீடாகும்.! அந்த வகையில் அன்னை பூபதியின் நினைவு தினம் என்பதானது நாட்டுப்பற்றாளர் தினம் என்று தமிழீழத் தேசியத் தலைமையினால் பிரகடனப் படுத்தப்பட்டது மிகப்பொருத்தமானதாகும்!



அந்த அளவிற்கு, ஒரு விடுதலைப் போராட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள், நாட்டுப்பற்றாளர்கள் என்பதை, வரலாறு சுட்டிக் காட்டி நிற்கின்றது!!


இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில்தான் தமிழீழத்து நாட்டுப் பற்றாளர்களையும்,அவர் தம் அளப்பரிய பணியையும், தியாகத்தையும், நாம் புரிந்து கொள்ள வேண்டும்!! சில சமயங்களில், விடுதலைப்புலிகள் எதிர் கொள்ளாத இடர்களை நாட்டுப்பற்றாளர்கள் எதிர் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இங்கே அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். போராளிகள் களயதார்த்த நிலைக்கும் போர் முறைகளுக்கும் ஏற்ப இடம் மாறிச் செல்வார்கள். ஆனால் பொது மக்களாகிய நாட்டுப் பற்றாளர்களோ தமது வதிவிடத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்து ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுவார்கள். ஆக்கிரமிப்பின் வன்முறையை எதிர்ப்பதற்குத் தம்மிடம் படைக்கருவிகள் இல்லாதபோதும்,அந்த வன்முறைக்கு முகம் கொடுத்து,அதனை உள்வாங்குவார்கள். தன் காரணமாக உயிரழிவையும், சொத்தழிவையும் தாங்கியும் கொள்வார்கள். ஆயினும் தொடர்ந்தும் விடுதலைப் போராட்டத்தைத் தாங்கி நிற்பார்கள்.


இங்கே மேலும் ஒரு மிக முக்கியமான விடயத்தையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். அன்னை பூபதி அவர்களின் அகிம்சை வழியிலான உண்ணா நிலைப் போராட்டமும், தியாகி திலீபனின் அகிம்சை வழியிலான உண்ணா நிலைப் போராட்டமும்,   சமாதானத்தினை வேண்டி நடாத்தப்பட்ட போராட்டங்களாகும்!! சமாதானத்தையும், அமைதியையும் நாடி நடாத்தப்பட்ட அமைதி வழி அகிம்சைப் போராட்டங்களை, ஆதிக்க சக்திகள் பொருட்படுத்துவதில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!!


அடிப்படையில் மகாத்மா காந்தியின் போதனைகளையும், அகிம்சை வழிப் போராட்டங்களையும், ஏற்றுக்கொண்ட ஒரு தேசம்தான் இந்தியா! ஆனால் அத்தகைய இந்தியா கூட ,அடக்குமுறை என்று வரும்போது, அகிம்சையையும் சமாதானத்தையும் தூக்கி எறிந்து விடுகின்றது என்பதற்கு அன்னை பூபதியும், தியாகி திலீபனும் சாட்சிகளாக விளங்குகின்றார்கள்!!


அகிம்சையைப் போதிக்கின்ற இந்தியாவே, இவ்வாறு நடந்து கொள்ளும்போது, தொடர்ந்து இரத்தவெறி கொண்டு, அடக்குமுறையை மேற்கொண்டு வருகின்ற சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகள், சமாதானத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று எவராவது இன்றும் நம்புவார்களாக இருந்தால் அது மடமைத்தனமானதாகும்.


அன்றிலிருந்து,  தமிழீழத்து நாட்டுப் பற்றாளர்களைச் சிங்கள அரசுகள் தொடர்ந்தும் கொலை செய்து வந்ததை  நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்குரிய காரணங்களையும், நாம் வரலாற்று ரீதியாகத் தர்க்கித்திருந்தோம். ‘மக்கள் எழுச்சிப் பேராட்டத்தை அடக்கி ஒடுக்க வேண்டுமென்றால்,அந்தப் போராட்டத்தைத் தாங்கி நிற்கும் நாட்டுப் பற்றாளர்களை நசுக்க வேண்டும்’ என்று, அடக்கு முறையாளர்கள் தொடர்ந்து சிந்தித்தும்,செயல்பட்டு வருவதையும், தமிழீழத்து நாட்டுப்பற்றாளர்கள் மீதான படுகொலைகள் நிரூபித்து நிற்கின்றன.


இத்தகைய உயரிய நாட்டுப்பற்றாளர்களும், அவர்களுடைய குறியீடான அன்னை பூபதியும் எம்போன்ற சாதாரண மக்களுக்கு மிகச் சிறந்த உதாரணங்களாக திகழுகின்றார்கள்.


‘தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.’ -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.



-



சபேசன் சண்முகம், ஒஸ்ரேலியா!


 




 

2 comments:

  1. Top 10 Casinos - ONE Casino Review
    Find out everything you need to know about Top 10 casino in 사다리게임 사이트 India bloganak.com including slots, live 오즈포탈 dealer games, bonuses, security and 가상 화폐 란 more. Rating: 4.8 · ‎Review 모바일 벳 365 by Casino Sites

    ReplyDelete
  2. Borgata to Close Its Casino Floor - Dr. Maryland
    ATLANTIC CITY (WJAR) — 논산 출장마사지 Atlantic City's Borgata 춘천 출장안마 Casino and 경산 출장마사지 Racetrack announced 김해 출장안마 Monday that it is closing 벳 365 its casino floor to the public Friday.

    ReplyDelete

Post Bottom Ad

Pages