தற்போது நிலவிவரும் பூகோளப் போட்டியென்பது பலமுனைகளில் நிகழ்ந்துவந்தாலும் மற்றெல்லா முனைகளையும் பின்தள்ளிவிட்டு துருத்திக்கொண்டு நிற்பது சீனா எதிர் அமெரிக்கா என்ற முனைதான். ஆனால் இந்த முனைகூட தனித்த இரு நாடுகளிடையிலான முறுகல் என்றில்லாமல் சீனா எதிர் அமெரிக்க சார்பு அணி என்றளவில் புதிய பரிணாமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
இதன் வளர்ச்சி நிலை அல்லது ஒரு கொதிநிலைப் புள்ளிதான் இந்த The Quad.
அமெரிக்கா தலைமையில் அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து வகுத்துக்கொண்ட ஒரு வியூகக் கூட்டணிதான் இந்த The Quad. என்னதான் பல காரணங்களைச் சொல்லிக்கொண்டாலும் இந்தக் கூட்டணியின் நோக்கம் சீனாவை எதிர்கொள்வது என்பதே.
ஜப்பானும் இந்தியாவும் சீனாவின் காலடிக்குள் இருந்துகொண்டு நெருக்கடிகளை எதிர்கொள்பவை. பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் சீனாவுடன் பிராந்திய ரீதியில் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பவை.
அவுஸ்திரேலியாவின் பிரச்சனையென்பது தற்காலத்தில் மிகப்பெரும் பூதமாகக் கிளம்பி நிற்கிறது. கோவிட்-19 கிருமித் தொற்றுப் பரவல் தொடர்பாக அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகத்தைப் போலவே அவுஸ்திரேலியாவும் சீனாவைச் சீண்டிக்கொண்டே வந்திருக்கிறது. ஒருகட்டத்தில் சீனா அவுஸ்திரேலியாவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் முக்கிய பொருளாதார வளங்களில் கைவைத்து அவுஸ்திரேலியாவுக்குப் பாடம் புகட்டவெனப் புறப்பட்டது.
பருவகாலத்தின் முக்கிய ஏற்றுமதியாகிய சிங்கி இறால்களைத் திடீரென தனது துறைமுகங்களில் முடக்கியது சீனா. நத்தார்ப் பண்டிகையை ஒட்டிய காலங்களில் மிகப்பெரும் வருவாயை அவுஸ்திரேலியாவுக்குத் தருகின்ற இந்த சிங்கி இறால் ஏற்றுமதி தடைப்பட்டது முதலாவது அடியாக அமைந்தது. ஏற்றுமதி செய்து சீனத் துறைமுகத்தில் முடங்கியவற்றை விட, ஏற்றுமதி செய்யாமல் தேங்கிவிட்ட சிங்கி இறால்களை அந்நேரத்தில் அவுஸ்திரேலியாவுக்குள் அரை விலையில் விற்க வேண்டி வந்தது.
அதற்கடுத்தபடியாக சீனாவுக்கு ஏற்றுமதியாவதில் மிகுந்த வருமானத்தைத் தரக்கூடிய அவுஸ்திரேலிய வைன் மதுபானத்தின்மீது திடீரென சிறப்புத் தீர்வை வரியை அறிமுகம் செய்தது சீனா. இதன்மூலமும் சீனச்சந்தையில் வைன் குடிபானத்துக்கான கேள்வியைப் பெருமளவில் இழந்தது அவுஸ்திரேலியா. அதற்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி உட்பட்ட கனமவளங்களைத் தடுத்தது அல்லது சிறப்புத் தீர்வை வரிகளை விதித்தது சீனா.
இப்படி தனிக்காட்டு இராஜாவாக ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை பொருளாதார ரீதியில் வெளிக்காட்டியது மட்டுமன்றி பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குரிய வேலைகளையும் அவுஸ்திரேலியா நோக்கி சீனா மெல்ல மெல்ல ஆரம்பித்த்தது. அவுஸ்திரேலியாவுக்கு அண்மையான தீவுகளை ஏதோவொரு விதத்தில் தனது ஆளுகைக்குள் கொண்டு வருகின்றது. அவுஸ்திரேலியாவின் மிக முக்கிய வருமானமான பன்னாட்டு மாணவர்களின் கற்கையும் சீன மாணவர்களிலேயே பெருமளவு தங்கியுள்ள நிலையில் எதற்கெடுத்தாலும் சீனாவுக்குப் பயந்து பயந்து பேச வேண்டிய ஒரு நிலையில் அவுஸ்திரேலியா இடர்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறாக அவுஸ்திரேலியா பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற வேளையில் அமெரிக்காவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து உருப்படியான ஒரு வேலைத்திட்டத்தோடு ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இயங்க வேண்டிய தேவை செயல்வடிவம் பெறத் தொடங்கியது. இதன் அடுத்தகட்டமாக இந்த நான்கு நாடுளும் சேர்ந்து அமைந்த இந்தக் கூட்டணியின் முதலாவது கூட்டம் கடந்த மார்ச் 19ஆம் நாள் கூடியது.
இதிலே சீனாவுக்கு எதிரான எரிச்சலே மேலோங்கியிருந்ததாக செய்தியூடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவிடமிருந்து அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்கள், இந்தியா எதிர்கொள்ளும் எல்லை மேவிய ஆக்கிரமிப்பு முயற்சிகள் என்பன முக்கிய பேசு பொருளாகின. ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா மிகக்காத்திரமாக இந்த அணியை வழிநடத்தி பிராந்தியப் பாதுகாப்பைப் பேண உறுதிபூண்டுள்ளது.
சீனாவின் பிரச்சனைகளுக்கு அப்பால், இந்த நான்கு நாடுகளுக்குமிடையில் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பகிர்வது, ஏனைய வளங்களைப் பகிர்வது, வியாபார ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதும் பேணுவதும் என பெரியதொரு முன்னெடுப்பாக இந்தக் கூட்டணி அமையப் பெற்றுள்ளது.
இந்த நான்கு நாடுகளின் கூட்டணியைப் போல் அவுஸ்திரேலியா, இந்திய, பிரான்ஸ் ஆகிய இணைந்து இன்னொரு தளத்தில் ஓர் அமைப்பாகச் செயற்படத் தொடங்கியுள்ளன.
எது எவ்வாறு இருப்பினும் தனக்கெதிராக எல்லோரும் அணிதிரள்வதைப் பார்த்தபடியிருக்கும் சீனா இவற்றுக்கெதிரான முறியடிப்புப் பொறிமுறையை எவ்வாறு வடிவமைத்திருக்கும் என்பதை இனிவரும் நாட்களில் காணலாம்.
-மறவன்


No comments:
Post a Comment