ஈழப்போராட்டம், விடுதலைப் புலிகள், தேசியத்தலைவர் குறித்த வரலாற்றுத் திரிபுகளும் அவதூறுகளும் தற்காலத்தில் பல்கிப் பெருகத் தொடங்கியுள்ளதை நாம் பார்க்கின்றோம். அறியாமையால் செய்வது, ஆவர்வக்கோளாறால் செய்வது(பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சொல்லும் மிகைப்படுத்தப்பட்ட புழுகுகள்கூட உண்மையில் இழிவுபடுத்துவதாகவும் வரலாற்றுத்திரிபாகவும் அமைந்துவிடுகின்றன) என்பவற்றைத் தாண்டி திட்டமிட்டுச் செய்வது என்ற விதத்தில் மிக ஆபத்தான ஒரு போக்கு நிலவுகின்றது.
அவ்வகையில், Family Man -2 என்கிற ஒரு திரைத்தொடர் புதிதாக முளைத்திருக்கும் ஓராபத்து. மிக
விறுவிறுப்பான ஒரு திரைக்கதைத்தொடரில் சுவாரசியத்துக்காவும் விறுவிறுப்பான கதையோட்டத்துக்காகவும்
ஈழவிடுதலைப் போராட்டமும் அதை ஆயுத வழியில் தலைமைதாங்கிய விடுதலைப் புலிகள்
அமைப்பும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எமது போராட்டம், இயக்கம், தலைமை குறித்த
எதிர்மறை எண்ணங்களை விதைக்கும்விதத்தில் கதையோட்டமும் காட்சிகளும் அமையப்பெற்றதால்
தமிழ்த்தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புக்களை இத்தொடர் பெற்றுள்ளது.
இந்த எதிர்ப்பானது வரவேற்கப்பட வேண்டியது என்பதில்
மாற்றுக்கருத்தில்லை. அதேவேளை, கூர்மைப்படுத்தப்படாத, வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பினால்
எழும் வசைகளோடு மட்டுப்படுத்தப்படுகின்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பு இருக்கின்றது. இப்படியாக, விளைவுகளுக்கு எதிர்வினையாகக் கோபப்படுவதோடு மட்டும் நின்றிடாது விரிவாகச்
சிந்திக்க வேண்டிய நிலையில் ஈழத்தமிழினம் நிற்கின்றது.
எங்கள் வரலாற்றையும் எங்கள் கருத்தையும் நாமே
விதைக்கும்வண்ணம் கலைத்துறையைப் பயன்படுத்த ஈழத்தமிழர்கள் முன்வர வேண்டும். கோடிக்கணக்கில்
பணத்தைக் கொட்டி வியாபாரச் சினிமாக்களைத் தயாரிக்கவும், பார்த்து இரசித்து தமிழ்ச்சினிமாவை
வளர்க்கவும் ஈழத்தமிழர்கள் இருக்கும்போது, எமக்கான பரப்புரையைச் சினிமாவில்
செய்வதற்குரிய முயற்சியை நாம் செய்வதில்லை.
திரைப்படம் தடைசெய்யப்படுமென்ற நிலைமையைத் தாண்டி உலகிலே கருத்துப்பரப்பைச் செய்வதற்கான வசதிகளோடு ஈழத்தமிழினம் பரந்திருக்கிறது. வெறுமனே, அவன் கேவலப்படுத்திவிட்டான், இவன் கேவலப்படுத்திவிட்டானென்று புலம்புவதிலும் சகட்டு மேனிக்கு எதிர்த்து முகநூலில் எழுதுவதோடு மட்டும் நின்றிடாது, தரமான கலைப்படைப்புக்கள் ஊடாக உலகுக்கு உண்மைகளை உணர்த்த நாம் முயல வேண்டும். திரைத்துறையில் அதற்கான சாத்தியங்கள் விரிந்தே இருக்கின்றன.

No comments:
Post a Comment