தமிழீழ விடுதைலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்களின் பேராதரவு காலங்காலமாக இருந்து வந்துள்ளது. எமது போராட்டம் ஆயுதவழிக்குப் பரிணமித்த வேளையிலும் மிகத்தீவிரமான ஆதரவுத்தளத்தைத் தமிழ்நாடு வழங்கியிருந்தது.
சரியாகச் சொல்லப் போனால் ஆயுதப் போராட்டக் குழந்தைக்கு அன்று செவிலித்தாயாக இருந்து பராமரித்து வளர்த்தது தமிழ்நாட்டு மக்கள்தான் என்றால் மிகையில்லை.
அன்று எமது தேசியத் தலைவர் தமிழ்நாட்டில் தனக்கான ஆதரவுத் தளத்தைப் பலமாக வைத்திருந்தார். மிக நீண்டகாலத்துக்கு உறுதியாக இருக்கக் கூடியவாறு அதைப் புடம்போட்டிருந்தார். அப்போது கட்சிகள் சார்ந்தோ இயக்கங்கள் சார்ந்தோ சித்தாந்தங்கள் சார்ந்தோ பக்கச்சார்பான நிலைப்பாடுகள் எடுத்து அந்த ஆதரவுத் தளத்தை அவர் வடிவமைக்கவில்லை.
தமக்குள் முரண்பட்டிருக்கும் அரசியற் கட்சிகள், இயக்கங்கள் அனைத்திலுமே எமது தலைமை தனக்கான ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்தியிருந்தது.
பெரியாரிய, திராவிட இயக்கங்களின் ஆதரவு, அதேநேரம் இச்சிந்தாந்தத்தோடு ஒட்டாத (காங்கிரஸ் வழிவந்த) தமிழ்த்தேசியவாதி பழ.நெடுமாறன் போன்றோரின் ஆதரவை நிறைவாகப் பெற்றிருந்தார் தலைவர். இவர்களோடு தொடர்புறாத பொதுவுடமைவாதிகள் சிலர், கவிஞர் இன்குலாப் போன்றோர், காங்கிரஸ் கட்சியின் இடைநிலைத் தலைவர்கள் சிலர் என்று தனது ஆதரவுத்தளத்தைப் பரவலாக்கியிருந்தார் தலைவர். எம்.ஜி.ஆர் என்கிற தமிழ்நாட்டு முதலமைச்சரின் ஆதரவு, எம்.ஜி.ஆரின் கட்சி மட்டுமென்றில்லாமல் அதன் தாய்க்கட்சியும் பரம எதிரிக்கட்சியுமான தி.மு.க விலும் ஆழமான ஆதரவுத்தளத்தைத் தலைவர் கட்டியமைத்திருந்தார்.
முரண்பட்ட துருவங்கள் எல்லாம் தலைவரினதும் இயக்கத்தினதும் மானசீக ஆதரவாளர்களாகவும் எவ்விலை கொடுத்தும் தலைவரையும் இயக்கத்தையும் காப்பவர்களாகவும் வளர்ப்பவர்களாகவும் செயற்பட்டார்கள் என்பது வரலாறு.
இந்த வரலாற்றுத் தொடர்ச்சியும் பிணைப்பும் இன்று கலகலத்துப்போய் ஒரு முட்டுச்சந்தில் பரிதவித்து நிற்கிறதோ என்கிற ஐயம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இணைய உலகில் நடைபெற்றுவரும் பரஸ்பர தூற்றல்களும் சச்சரவுகளும் தமிழ்நாடு, தமிழீழம் ஆகிய இரு தமிழ்த்தேசங்களுக்கும் ஆபத்தானவையாகவே அமையப் போகின்றன.
தமிழ்நாட்டு அரசியலில் கட்சிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளும், சித்தாந்த முரண்பாடுகளும் மற்றெல்லா இடங்களைப் போலவே இயல்பானவை. எங்கள் தாயகத்திலும் பல்வேறு நடைமுறை, கொள்கை, சித்தாந்த முரண்பாடுகள் இருக்கின்றன. அரசியற் கட்சிகளாக அன்றி தமிழர் நலனுக்காக இயங்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்குள்கூட இந்த முரண்பாடுகள் இருக்கின்றன. அவ்வாறு தமிழ்நாட்டு அரசியலில் இருக்கும் முரண்பாடுகளுக்குள் வேறுதரப்பு நுழைந்து களமாடுவது அறமன்று. தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வரும் ஆபத்துகளுக்கு எதிராக அவர்களோடு துணைநிற்பது நமது கடமையேயன்றி உள்முரண்பாடுகளுக்குள் தொடர்புறாமல் இருப்பதே பொருத்தமானது.
இதேவேளை, ஒரு கட்சியின் தலைமை மேலுள்ள விமர்சனத்திலே, தமிழகத்தின் ஆதாரமான ஒரு சித்தாந்தத்தையும் அதைப் பின்தொடரும் இயக்கங்களையும் தலைவர்களையும் எதிரியாகக் கருதி தேவையற்ற பிணக்குகளை உருவாக்குவதையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எமது விடுதைலைப் போராட்டத்தின் தொடக்கம் முதல் உறுதுணையாய் நின்றுவரும் ஒரு பெரும் ஆதரவுத்தளத்தை, தேவையற்ற முறையில் எதிர்நிலையில் நிறுத்தி ஒரு புதிய களமுனையைத் திறந்து எமது பொது எதிரியைத் தப்பவிட்டுவிடக் கூடாது.

No comments:
Post a Comment