பெண்களின் சமநிலை பேணப்படாமல் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை - தேசத்தின் குரல்

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 19, 2021

பெண்களின் சமநிலை பேணப்படாமல் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை

ஒக்டோபர் பத்தாம் நாள் “தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்“ என்று ஈழத்தமிழரிடையே  நினைவுகூரப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் நினைவுநாளே தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகின்றது.

பெண்களுக்குச் சமவுரிமை வழங்கப்பட வேண்டுமென்று கருத்துரைக்கவும் போராடவும் வேண்டிய நிலையிலேயே இன்றளவும் மனிதகுலம் இருந்து கொண்டிருக்கிறது. காலவோட்டத்தில் படிப்படியாக முன்னேறி வந்திருந்தாலும் இன்னமும் பெண்களுக்கான சரிசமமான நிலை எங்குமே வழங்கப்பட்டு விடவில்லை.  ஒப்பீட்டளவில் மேற்குலகில், குறிப்பாக ஐரோப்பிய சமூகத்தில் பெண்களின் நிலை சற்று மேம்பட்டிருந்தாலும் இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமே.

தமிழ்ச்சமூகத்தில் பெண்களின் மேம்பாட்டை அடிப்படைக் கூறுகளுள் ஒன்றாக வைத்து நடாத்தப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டம். மிக நுட்பமாகவும் காத்திரமாகவும் பெண்விடுதலை என்ற கோட்பாட்டை தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும் முன்னெடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. அது எவ்வளவு காத்திரமாக பெண்விடுதலையை முன்னெடுத்தது, எவற்றைச் சாதித்தது என்பதை, அவ்வியக்கம் செயற்படத் தொடங்கிய போதிருந்த தமிழ்ச்சமூகத்தின் கட்டுப்பெட்டித் தனத்திலும், அடிப்படைவாதத் தனத்திலும் நின்றே எடைபோட வேண்டும்.

பெண்கள் இடுகாடு செல்வதை ஒரு புரட்சியாகச் சொல்லவேண்டிய நிலையிலிருந்த சமூகத்தில்தான் விடுதலைப் புலிகள் பெண்விடுதலையை முன்னெடுக்க வேண்டியிருந்தது என்பதிலிருந்து இதன் தார்ப்பரியத்தை விளங்கிக் கொள்ளலாம். நீண்ட ஆயுதப் போராட்டத்தில் தமிழீழப் பெண்களின் சமூகநிலை வளர்ச்சியென்பது அபரிதமானது. தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்வழி நின்ற விடுதலை இயக்கமும் பெண்விடுதலை சார்ந்து காட்டிய அர்ப்பணிப்பும் நேர்மையும் அப்பழுக்கற்றது. அவற்றின் விளைவும் அளவிட முடியாதது.

இவ்வாறு அடைந்த புள்ளியிலிருந்து மேலும் முன்னேறவேண்டுமேயொழிய பின்னோக்கிப் போக முடியாது. இன்றைய சூழலில் தமிழ்ப்பெண்ணியம் என்பது முன்னேறிச் செல்கிறதா, தேங்கி நிற்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பதை ஆராய வேண்டிய நிலையில் நிற்கின்றோம்.

பெண்களின் சுயம் பாதுகாக்கப்படாத,  அங்கீகரிக்கப்படாத சமூகம் எப்போதும் நலிவானதாகவே அமையும். தமிழ்ச்சமூகத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெண்களின் வகிபாகம் என்ன? அரசியற் கட்சிகளின் கட்டமைப்பில் பெண்களின் வகிபாகம் என்ன? சமூகத்துக்கான திட்டமிடலில், தீர்மானங்களை நிறைவேற்றுவதில், செயற்படுத்துவதில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்ன? என்ற கேள்விகளை முன்வைத்து தற்போதய நிலையை நாம் உரையாட வேண்டும்.

வரலாறு எமக்களித்த படிப்பினைகளைக் கொண்டு நாம் முன்னேறிச்செல்ல முயல வேண்டும். தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சியும், நிறைவும் பெண்களின் சமநிலையை உறுதிப்படுத்துவதில்தான் பெரிதளவு தங்கியிருக்கிறது என்ற மானுடவியற் கோட்பாட்டை மனத்தில் நிறுத்தி சிந்திப்போம், செயற்படுவோம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages